அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையத்தில் இருக்கைகள் அமைக்க கோரிக்கை

அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் கால் கடுக்க நிற்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே உடனடியாக இருக்கைகள் அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையத்தில் இருக்கைகள் அமைக்க கோரிக்கை
Published on

பூந்தமல்லி,

சென்னையின் நுழைவு வாயிலாக அமைந்து உள்ளது அய்யப்பன்தாங்கல். இந்த பகுதியில் இருந்து போரூர், கோயம்பேடு, கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், கிண்டி, பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு இங்கிருந்து செல்ல முடியும். மேலும், அய்யப்பன்தாங்கல் பகுதியில் அரசு பணிமனை உள்ளது. இங்கிருந்து நாள்தோறும் சென்னை நகருக்கு 150-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பனிமனையை ஒட்டி மிகப்பெரிய அளவில் மேற்கூரை போட்டு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் உட்கார இருக்கைகள் கிடையாது. எனவே இந்த பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இது பயணிகளை முகம்சுளிக்க வைக்கிறது.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

சென்னையின் முக்கிய பகுதியான அய்யப்பன்தாங்கலை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி தனியார் மருத்துவமனை, அரசு பள்ளிகள், தனியார் கல்லூரிகள் உள்ளிட்டவையும் அதிகமாக உள்ளன.

இதனால் தினந்தோறும் இந்த பஸ் நிலையத்திற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அதுமட்டும் இன்றி இங்கிருந்து உள்ளூர் பகுதிகளுக்கு கூடுதலாக மினி பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையம் பார்ப்பதற்கு பெரியதாக இருந்தாலும் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் ஏதும் இல்லை.

இதனால் பஸ்சில் பயணம் செய்ய வரும் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம், கால் கடுக்க காத்துக்கிடக்க வேண்டி உள்ளது. இதில் நோயாளிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

இருக்கைகள் இல்லாத காரணத்தால் பயணிகள் அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் கட்டண கழிப்பிடம் உள்ள இடங்களில் அமர்ந்து கொண்டு இருப்பதால், பஸ் வந்ததும் அதில் இடம் பிடிக்க ஓடி வருவதால் கால் தவறி கீழே விழும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கிறது.

இந்த பஸ் நிலையத்தின் நிழற்குடை ஓட்டை, உடைசலுடன் மிகவும் சேதம் அடைந்து இருந்தது. பல போராட்டங்களுக்கு பிறகு அந்த நிழற்குடை சரி செய்யப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்தில் பயணிகள் அமர இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. எனவே எங்களுடைய நீண்ட கால கோரிக்கை நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ்வாறு பயணிகள் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com