பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு - மோப்பநாய் மூலம் தீவிர சோதனை

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு - மோப்பநாய் மூலம் தீவிர சோதனை
Published on

சென்னை,

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று வெளியானது. இதனால் நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் சென்னையின் முக்கிய பகுதிகளான எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் போலீசார் நேற்று குவிக்கபட்டனர்.

ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணிகளை, நுழைவு வாயிலில் வைத்து போலீசார் சோதனை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரெயில் பெட்டிகள், தண்டவாளங்கள், பார்சல் அலுவலகங்கள் போன்ற இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் ரெயில் நிலையங்களுக்கு வருவதை தீவிரமாக கண்காணித்தனர். இந்தநிலையில் பாதுகாப்பு ஏற்பாடு ரெயில் நிலையங்களில் எந்தளவு உள்ளது என்பதை கண்காணிக்க சென்னை மண்டல ரெயில்வே சூப்பிரண்டு பி.ராஜன் நேற்று சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பார்வையிட்டார்.

இந்த பாதுகாப்பு பணியில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் 46 ரெயில்வே போலீசாரும் 25-க்கு மேற்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டனர். மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 70 ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்புப்படையினரும் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது ரெயில்வே துணை சூப்பிரண்டு முருகன், எட்வர்டு மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சசிகலா, பத்மகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com