

தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சந்தானம், மகளிர் திட்ட அலுவலர் சரவணன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாப்செட்கோ) மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் கடன் திட்டங்களின் மூலம் நடப்பாண்டில் அதிக நபர்களுக்கு மானிய வட்டியில் தொழிற்கடன் வழங்க வேண்டும். இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.10 கோடி கடன் வழங்கும் இலக்கை அடையும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின பிரிவை சேர்ந்த மருத்துவம், பொறியியல், பி.எஸ்.சி. (விவசாயம்) மற்றும் நர்சிங் ஆகிய பட்டப்படிப்புகளை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் விரைவில் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
தொழிற்கல்வி படிக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி கடன் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி படிப்பவர்களாகவும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.