வத்திராயிருப்பு அருகே சூறைக்காற்றுக்கு வாழைகள் சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு அருகே நேற்று முன்தினம் வீசிய சூறைக்காற்றால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தது. இதற்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு அருகே சூறைக்காற்றுக்கு வாழைகள் சேதம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று முன்தினம் மாலை சுமார் ஒன்றரை மணி நேரம் நகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையொட்டி சூறைக்காற்று வீசியது. குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் மலையடிவாரப் பகுதியில் விவசாய நிலங்களில் சூறாவளி காற்று வீசியது. இதில் 20 ஏக்கரில் பயிரிடப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதில் மம்சாபுரத்தை சேர்ந்த பொன்னுத்தாய் என்பவரது நிலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகளும், முருகன் என்பவர் நிலத்தில் ஆயிரம் வாழைகள் சாய்ந்து விழுந்தன.

ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வாழைக்காய், வாழைப்பூக்கள் மற்றும் பழங்களை விற்க முடியாத நிலையில், தற்போது சூறாவளி காற்று ஏற்படுத்திய நஷ்டத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல் மம்சாபுரம் பகுதியில் 20 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு சூறாவளி காற்றால் சாய்ந்து விழுந்தது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- கடன் வாங்கி விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தால் துயரத்துக்குள்ளாகி உள்ளோம். எனவே அரசு இதற்கான உரிய நஷ்டஈடு வழங்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் வத்திராயிருப்பு பகுதியிலும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அர்ச்சுனாபுரம் பகுதியில் பயிரிடப்பட்ட வாழைகள் சாய்ந்து நாசமாகின. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயி மாரியப்பன், சுந்தரம் ஆகியோர் கூறும்போது, சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 400-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து ரூ.60 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த வாழைக்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com