பெங்களூரு அரசு காப்பகத்தில் இரவு உணவு சாப்பிட்ட 103 சிறுவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு கலெக்டர் நேரில் விசாரணை

பெங்களூருவில் அரசு காப்பகத்தில் இரவு உணவு சாப்பிட்ட 103 சிறுவர்களுக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கலெக்டர் விஜய்சங்கர் நேரில் விசாரணை நடத்தினார்.
பெங்களூரு அரசு காப்பகத்தில் இரவு உணவு சாப்பிட்ட 103 சிறுவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு கலெக்டர் நேரில் விசாரணை
Published on

பெங்களூரு,

பெங்களூரு சித்தாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டைரி சர்க்கிள் அருகே ஓசூர் ரோட்டில் சிறுவர்களுக்கான அரசு காப்பகம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வசித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் வசிக்கும் சிறுவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டானது. மேலும் 93 பேருக்கு வயிற்று வலி மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் சித்தாபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் 103 சிறுவர்களும் உடனடியாக, இந்திராகாந்தி குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவர்களில் 6 பேர் மட்டும் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அந்த 6 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, 6 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் நேற்று காலையில் இந்திராகாந்தி குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு மாவட்ட கலெக்டர் விஜய்சங்கர் நேரில் சென்று சிறுவர்களின் உடல் நலம் குறித்தும் டாக்டர் நவீனிடம் கேட்டு அறிந்து கொண்டார். மேலும் சிறுவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு, கலெக்டர் விஜய்சங்கர் உத்தரவிட்டார். மேலும் சிறுவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம் பற்றியும் அவர் விசாரணை நடத்தினார்.

இதுபற்றி கலெக்டர் விஜய்சங்கர் நிருபர்களிடம் கூறுகையில், அரசு காப்பகத்தில் இரவு உணவு சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களது உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

காப்பகத்தில் நேற்று முன்தினம் இரவு சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்தது தெரியவந்தது. இதனால் உணவு விஷமாக மாறியதும், அந்த உணவை சாப்பிட்டதால் சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும் காப்பகத்தில் வழங்கப்பட்ட உணவு வகைகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 100 சிறுவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் நேற்று மாலையில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3 பேருக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர் நவீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com