

பெங்களூரு,
பெங்களூரு நகர மாவட்ட நிர்வாகம் சார்பில் பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் நாளை (15-ந்தேதி) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அங்கு பந்தல், மேடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று கலெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீஸ் கமிஷனர் சுனில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிறகு கலெக்டர் விஜயசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக மானேக்ஷா மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. பந்தல், மேடை, தடுப்புகள், இருக்கைகள் அமைப்பது போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மேடையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தேசிய கொடி ஏற்றும் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா புதன்கிழமை(நாளை) நடக்கிறது.
காலை 8.58 மணிக்கு முதல்-மந்திரி குமாரசாமி மைதானத்திற்கு வருகிறார். சரியாக காலை 9 மணிக்கு அவர் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். அப்போது விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வானத்தில் பறந்து வந்து பூக்களை தூவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு அணிவகுப்பு மரியாதையை முதல்-மந்திரி ஏற்றுக்கொள்கிறார். அதைத்தொடர்ந்து மாநில மக்களுக்கு முதல்-மந்திரி சுதந்திர தின உரையாற்றுகிறார். போலீஸ் உள்பட பல்வேறு குழுக்களின் அணிவகுப்பு நடக்கின்றன. அதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.