‘பானி’ புயலால் அனைத்து படகுகளுக்கும் ஓய்வு: மீன்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு

‘பானி’ புயலால் அனைத்து படகுகளுக்கும் ஓய்வு தரப்பட்டு உள்ளதால் மீன்கள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. சிறிய ரக மீன்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
‘பானி’ புயலால் அனைத்து படகுகளுக்கும் ஓய்வு: மீன்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு
Published on

சென்னை,

தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ளடங்கிய கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் 15-ந்தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

தடைக்காலத்தையொட்டி கடலோர பகுதிகளிலேயே படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. சிறிய ரக படகுகள் மூலம் வரையறுக்கப்பட்ட கடல் எல்லைகளில் மட்டுமே மீனவர்கள் சென்று மீன்களை பிடித்து வருகின்றனர். இதனால் தமிழகத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்தே மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கர்நாடகா, மங்களூரு, கேரளா, மும்பை, அந்தமான் பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகின்றன.

தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதுகுறித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வியாபாரி எம்.சி.பி.இளையராஜா கூறியதாவது:-

பானி புயல் காரணமாக வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையை ஏற்று குறைந்த விசைத்திறன் கொண்ட படகுகளும் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மத்தி, கோலா, கிளிச்சை, கவளை, ரோகு உள்ளிட்ட சிறிய ரக மீன்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் பெரிய மீன்களின் விலை ரூ.100 முதல் ரூ.300 வரையிலும், சிறிய ரக மீன்கள் விலை ரூ.50 முதல் ரூ.100 வரையிலும் உயர்ந்திருக்கிறது. இன்னும் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. மீன்கள் விலை உயர்ந்திருப்பதால் மக்களின் வருகையும் சற்று குறைந்திருக்கிறது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட மீன்கள் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்/ரூ)

வஞ்சிரம் (பெரியது) - 1,000, வஞ்சிரம் (சிறியது) - 700, வவ்வால் (கருப்பு) - 650, வவ்வால் (வெள்ளை) - 900, சங்கரா (சிறியது) - 150, சங்கரா (பெரியது) - 250, படையப்பா சங்கரா - 300, பாறை - 250, பால்சுறா - 200, தும்புலி - 150, வெள்ளை கிழங்கான் - 650, காலா - 700, நெத்திலி (சிறியது) - 150, நெத்திலி (பெரியது) - 300, கிளிச்சை (சிறியது) - 150, கிளிச்சை (பெரியது) - 200, சீலா (பெரியது) - 350, சீலா (சிறியது) - 200, அயிலா - 200, கடம்பா - 250, சுதும்பு - 300, கோலா - 200, கொடுவா - 700, புளூ நண்டு - 350, இறால் - 150 முதல் 350 வரை, கவளை - 150, மத்தி - 150, ஏரிவாலை - 200, கட்லா - 200, ரோகு - 200. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com