வங்கி அதிகாரிகள் போன்று பேசி மோசடி: ஈரோடு மாவட்டத்தில் ரூ.11½ லட்சம் மீட்பு

வங்கி அதிகாரிகள் போன்று பேசி மோசடி செய்த வழக்கில், ஈரோடு மாவட்டத்தில் ரூ.11½ லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரிகள் போன்று பேசி மோசடி: ஈரோடு மாவட்டத்தில் ரூ.11½ லட்சம் மீட்பு
Published on

ஈரோடு,

வங்கி அதிகாரிகள் போன்று செல்போனில் பேசி மோசடி செய்த வழக்குகளில் ஈரோடு மாவட்டத்தில் ரூ.11 லட்சம் மீட்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறி உள்ளார்.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சமீபகாலமாக செல்போன்களில் வங்கி அதிகாரிகள் போன்று பேசி பணத்தை கொள்ளையடிக்கும் மோசடி தொடர்ந்து நடந்து வருகிறது. அதுபோன்று ஈரோடு மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் பேசுவதாக நினைத்து தங்களது ஏ.டி.எம். அட்டையின் 16 இலக்க எண்கள், அதில் உள்ள சி.வி.வி. எனப்படும் கார்டு வெரிபிக்கேசன் கோடு எண் மற்றும் ஓ.டி.பி. எனப்படும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை பெற்று பலரிடம் மோசடி நடந்து உள்ளது. இதில் 13 பேர் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்திய போது 13 நபர்களிடமும் சேர்த்து மொத்தம் ரூ.15 லட்சத்து 8 ஆயிரத்து 522 மோசடியாக திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அதன்படி வங்கி அதிகாரிகள் உதவியுடன் மொத்தம் ரூ.11 லட்சத்து 62 ஆயிரத்து 152 மீட்கப்பட்டது. அந்த தொகையை இழந்தவர்களின் வங்கி கணக்குகள் மூலம் திரும்ப வழங்கப்பட்டு உள்ளது.

அதே நேரம் பொதுமக்கள் தங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து அழைப்புகள் வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக வங்கி மேலாளர் பேசுகிறேன் என்று பேசி, ஏ.டி.எம். அட்டையின் 16 இலக்க எண்கள், கார்டு வெரிபிக்கேசன் கோடு ஆகியவற்றை கேட்டால் தெரிவிக்க வேண்டாம். அதுபோல் அவர்களிடம் ஓ.டி.பி. எனப்படும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ரகசிய குறியீட்டு எண்ணினை கண்டிப்பாக கூறவேண்டாம்.

மேலும் உங்கள் மின் அஞ்சல், வாட்ஸ்அப், முகநூல் மூலம் அறிமுகமாகும் நபர்கள் உங்களுக்கு பரிசு கிடைத்திருப்பதாகவோ, வேலைவாய்ப்பு இருப்பதாகவோ அல்லது பரிசுப்பொருட்கள் அனுப்புவதாகவோ கூறினால் கண்டிப்பாக முகவரி, வங்கி கணக்கு விவரங்கள், ஏ.டி.எம். அட்டையில் உள்ள விவரங்கள் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கொடுத்து ஏமாந்து விட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஒருவேளை இதுபோன்ற தகவல்களை கொடுத்து வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழந்தவர்கள், சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com