வங்கிகளில் விசைத்தறி உரிமையாளர்கள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும்

வங்கிகளில் விசைத்தறி உரிமையாளர்கள் வாங்கிய கடனை ரத்துசெய்ய வேண்டும் என்று பல்லடத்தில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வங்கிகளில் விசைத்தறி உரிமையாளர்கள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும்
Published on

பல்லடம்,

வங்கிக்கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாத விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ரா.வேலுசாமி தலைமை தாங்கினார். செயலாளர் அப்புகுட்டி முன்னிலை வகித்தார். கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் தாங்கள் வாங்கிய வங்கிக்கடன், இந்த நிலைக்கான காரணம், தொழில் நசிவு குறித்து பேசினார்கள். அத்துடன் விசைத்தறி உரிமையாளர்களின் கடன் குறித்தும், அதில் தள்ளுபடி தொடர்பாகவும் 5-ந் தேதி (இன்று) மாலை 4 மணிஅளவில் கலெக்டரை சந்தித்து பேசுவது என்றும் முடிவு செய்தனர்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ரா.வேலுசாமி கூறியதாவது:-

கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குட்பட்ட சோமனூர், கண்ணம்பாளையம், பல்லடம், அவினாசி, 63 வேலம்பாளையம், தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றும் விசைத்தறி தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் உள்ளனர். 2014-ம் ஆண்டு முதல் விசைத்தறி தொழிலில் நிலவி வரும் மிகவும் மோசமான நிலைமை காரணமாக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும், கையில் உள்ள நகைகளை விற்றும் வட்டி மட்டும் செலுத்தியுள்ளனர். 2014-ம் ஆண்டு அறிவித்த ஒப்பந்தக்கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்காததே கடனை செலுத்த முடியாதற்கு முக்கிய காரணமாகும்.

இந்த நிலையில் கடன் கொடுத்த நிறுவனங்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு செல்வதால் விசைத்தறியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே இதில் உண்மைநிலையை அறிந்து விசைத்தறி உரிமையாளர்கள் பெற்ற கடனை ரத்து செய்யவேண்டும் என்பதற்காக மாவட்ட கலெக்டரை 5-ந்தேதி (இன்று) சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் முன்னோடி வங்கி மேலாளர்களையும் சந்தித்து பேச உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com