2,035 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.107¾ கோடி வங்கி கடன்; அமைச்சர் வழங்கினார்

ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூரில் மகளிர் சுய உதவிக்குழுவினர் 2,035 பேருக்கு ரூ.107¾ கோடி வங்கி கடனுதவியை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
2,035 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.107¾ கோடி வங்கி கடன்; அமைச்சர் வழங்கினார்
Published on

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குதல் மற்றும் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் வீடு, இரு சக்கர வாகனம் ஆகியவை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் எம்.பி.சிவன்அருள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் ஆ.ரா.சிவராமன் வரவேற்றார். திட்டம் குறித்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் ஆ.ரா.சிவராமன் பேசியதாவது:

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 288 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் கந்திலி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம் மற்றும் மாதனூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இயங்குகிறது. இந்த குழுக்களில் 74 ஆயிரத்து 21 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அரசின் அனைத்து திட்டங்களையும் கிராமப்புறப் பகுதியில் ஒருங்கிணைத்து செயல்படுத்த 206 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், 206 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

சுயபுத்தி குழுவிற்கு வங்கி கடன் இணைப்பு 2019 20 ம் ஆண்டில் ரூ.208 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சுய உதவிக்குழுவிற்கு ஆதார நிதியாக 1140 குழுக்களுக்கு ஒரு கோடியே 71 லட்சம் உறுப்பினர்களின் சுழற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுய உதவிக்குழுவிற்கு சிறு தொழில் தொடங்க சமுதாய முதலீட்டு நிதியாக 1,167 குழுவிற்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 கோடியே 80 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் இந்த விழாவில் 2035 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.107 கோடியே 73 லட்சம் வங்கிக் கடனுதவியும், 100 பயனாளிகளுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனமம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியமாக தலா 25 ஆயிரம் வீதம் ரூ.25 லட்சமும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் மகளிருக்கான மானிய விலையில் இருசக்கர வாகனத்தை வழங்கினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆர்.ரமேஷ் உட்பட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் உதவி திட்ட அலுவலர் கோ.கலைச்செல்வன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com