கள்ளக்குறிச்சி அதிகாரியின் உதவியாளர் வங்கி லாக்கர் திறப்பு; 50 பவுன் நகைகள், வெள்ளி நாணயங்கள் பறிமுதல்

லஞ்ச வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளரின் உதவியாளர் வங்கி லாக்கர் நேற்று திறந்து சோதனை செய்யப்பட்டது. அதில் இருந்த 50 பவுன் நகைகள், வெள்ளி நாணயங்கள், ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி அதிகாரியின் உதவியாளர் வங்கி லாக்கர் திறப்பு; 50 பவுன் நகைகள், வெள்ளி நாணயங்கள் பறிமுதல்
Published on

ஆத்தூர்,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாபு (வயது 55). இவர் புதிய வேனுக்கு பதிவு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கடந்த 11-ந் தேதி விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதோடு இவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளரான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்து இருவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.30 லட்சத்து 17 ஆயிரத்தை கைப்பற்றினர். மேலும் அன்றைய தினம் ஆத்தூர் கோட்டை எல்.ஆர்.சி. நகரில் உள்ள செந்தில்குமாரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனைகளின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று ஆத்தூர் அருணகிரி நாதர் தெருவில் உள்ள ஆத்தூர் நகர கூட்டுறவு வங்கியில் செந்தில்குமார் மற்றும் அவருடைய மனைவி கவிதா ஆகியோரின் பெயரில் இருந்த லாக்கர்களை சோதனையிட விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் எழிலரசி உள்பட 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று வந்தனர்.

பின்னர் அவர்கள் வங்கி லாக்கர்களில் இருந்த பொருட்களை திறந்து சோதனை நடத்தினர். இந்த சோதனை செந்தில்குமாரின் மனைவி கவிதா, வங்கி மேலாளர் முருகதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை பிற்பகல் 3 மணி வரை இடைவிடாமல் தொடர்ந்து நடந்தது. இந்த சோதனை முடிவில், வங்கி லாக்கரில் இருந்த பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்சஒழிப்பு போலீசார் கைப்பற்றி எடுத்துச்சென்றனர். லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை காரணமாக, ஆத்தூர் நகர கூட்டுறவு வங்கி நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

சோதனை முடிந்து வங்கியில் இருந்து வெளியே வந்த கவிதா துப்பட்டாவால் முகத்தை மூடியவாறு உறவினர் ஒருவரின் ஸ்கூட்டரில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த சோதனை குறித்து லஞ்சஒழிப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், வங்கி லாக்கரில் 50 பவுன் நகைகளும், 200 கிராம் வெள்ளி நாணயங்களும், ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்கான 40 முக்கிய ஆவணங்களும் இருந்தன. அதனை பறிமுதல் செய்துள்ளோம். இதில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை, அதே லாக்கரில் வைத்து சீல் வைத்துள்ளோம். சொத்து ஆவணங்களை மட்டும் விழுப்புரம் கோர்ட்டில் ஒப்படைக்க எடுத்துச்செல்கிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com