கடன் கேட்டு சென்றால் வங்கி அதிகாரிகள் தரக்குறைவாக பேசுகின்றனர் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆடு, மாடுகள் வாங்க கடன் கேட்டு சென்றால் வங்கி அதிகாரிகள் தங்களை தரக்குறைவாக பேசுகின்றனர் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
கடன் கேட்டு சென்றால் வங்கி அதிகாரிகள் தரக்குறைவாக பேசுகின்றனர் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு தற்போது கடன் அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கடன் அட்டை மூலம் விவசாயிகள் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை கடன் பெறலாம். தென்னை விவசாயிகளின் நலனுக்காக கொப்பரை தேங்காயை அரசே தற்போது கொள்முதல் செய்து வருகிறது.

அத்துடன் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இ-அடங்கல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்துக்கான அடங்கல் சான்றிதழ்களுக்கு தங்கள் செல்போன்கள் மூலமே விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அதையடுத்து விவசாயிகளுக்கான கேள்விநேரம் தொடங்கியது. அப்போது தொப்பம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பயிருக்கு காப்பீடு செய்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை பயிர்காப்பீடு தொகை கிடைக்கவில்லை என தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய வேளாண் அதிகாரிகள், காப்பீடு நிறுவனத்திடம் அதுதொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விரைவில் காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

வத்தலக்குண்டுவை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு வைகை ஆறு செல்கிறது. ஆனாலும் எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை என்றனர். நிலக்கோட்டை தாலுகா விலாம்பட்டியை சேர்ந்த விவசாயிகள், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் காகித ஆலை நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதாகவும், அதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பின்னர் ரெட்டியார்சத்திரம் மாங்கரையை சேர்ந்த விவசாயிகள் பேசுகையில், மாங்கரை பகுதியில் அதிகமாக குளங்களை வெட்டினால் மழைக்காலத்தில் பாசனத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என்றனர். அவர்களை தொடர்ந்து திண்டுக்கல் சீலப்பாடி கோவிலூரை சேர்ந்த விவசாயிகள் பேசினர்.

அப்போது அவர்கள் ஆடு, மாடுகள் வாங்க எங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் கேட்டால் அங்குள்ள அதிகாரிகள் எங்களை தரக்குறைவாக பேசுகின்றனர் என்று குற்றம்சாட்டினர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com