வங்கிகளில் வழங்கப்படும் விவசாய கடனை விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும்

வங்கிகளில் வழங்கப் படும் விவசாய கடனை விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வங்கிகளில் வழங்கப்படும் விவசாய கடனை விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இயல்பைவிட 9.58 சதவீதம் அதிக அளவில் மழை பெய்துள்ளது. 2018-ம் ஆண்டில் இதுவரை 8.96 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வேளாண்மைத்துறையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற நுண்ணீர்பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் 100 உறுப்பினர்கள் கொண்ட விவசாய உற்பத்தியாளர் குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு உற்பத்தியாளர் குழுவிற்கும் ரூ.5 லட்சம் நிதிமூலதனம் வழங்கப்படுகிறது. 5 உற்பத்தியாளர் குழுக்கள் சேர்ந்து ரூ.15 லட்சம் வரை பெற்று வேளாண் எந்திரங்கள் வாங்கி விவசாய உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டம் குறித்த வேளாண் உற்பத்தியாளர்கள் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் எந்திரங்கள் விற்பனையாளர்கள் கூட்டுக்குழுக்கூட்டம் கடந்த 12-ந்தேதியன்று நடத்தப்பட்டு வேளாண் எந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் 39 குழுக்களுக்கும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 3 குழுக்களுக்கும் என மொத்தம் தேர்வு செய்யப்பட்ட 42 குழுக்களுக்கு ரூ.2 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டில் விடுபட்ட விவசாயிகளுக்கு ரூ.48 லட்சம் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அதில் ரூ.21 லட்சம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை வருகிற 31-ந் தேதிக்குள் அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து காப்பீட்டு தொகை பெறாத விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்புத்தொகை வழங்கவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கான காலஅவகாசம் ஓரு ஆண்டாக மாற்றி அமைக்க வேண்டும். இறால் மற்றும் வண்ண மீன் பண்ணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர் ஆதாரங்களான ஏரி, குளங்கள், நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தடுப்பணைகளை கட்ட வேண்டும், வரத்து கால்வாய், ஏரி, குளங்களை சீரமைக்க வேண்டும், விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். காலியாக உள்ள வேளாண்மை உதவி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கரும்பு நிலுவைத்தொகையை உடனடியாக தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி மதகுகளை சீரமைக்க வேண்டும். மணல் கடத்தலை தடுக்கவேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கும் விவசாய கடன்களை விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் வாடகைக்கு வழங்கும் டிராக்டர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். பாடியநல்லுர் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு மாற்று இடம் அமைத்து தர வேண்டும்.

ஏரிகளில் நிறுவன கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் கலெக்டரிடம் முன்வைத்தனர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதத்தில் பெறப்பட்ட விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றார். பின்னர் அவர் விவசாயிகளுக்கு மண்வள பாதுகாப்பு அட்டைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) பாண்டியன், மாவட்ட வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் எபினேசன், வருவாய் ஆர்.டி.ஓ.க்கள் முத்துசாமி, ஜெயராமன், பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com