பட்டுக்கோட்டை உதவி கலெக்டரிடம் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு முடி திருத்தும் தொழிலாளர்கள் மனு

சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கக்கோரி முடிதிருத்தும் தொழிலாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு உதவி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பட்டுக்கோட்டை உதவி கலெக்டரிடம் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு முடி திருத்தும் தொழிலாளர்கள் மனு
Published on

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க தலைவர் சிவா தலைமையில் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் மணிகண்டன் முன்னிலையில் முடி திருத்தும் தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் அனைவரும் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு உதவி கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

கொரோனா நோய் தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் கடந்த 50 நாட்களாக சலூன் கடைகளை அடைத்து உள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அல்லல்படுகிறோம். பலமுறை கோரிக்கை விடுத்தும் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்காத சூழ்நிலையில் நாங்கள் கடன், பசி, பட்டினி போன்ற இன்னல்களுக்கு ஆளாகி சாவை எதிர்நோக்கி உள்ளோம்.

எனவே 18-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்குமாறு வேண்டுகிறோம். அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் அரசு அறிவிப்பின்படி சமூக இடைவெளி, முக கவசம், கிருமிநாசினி பயன்படுத்தி பாதுகாப்புடன் முடிதிருத்தும் தொழில் செய்வோம் என உறுதி அளிக்கிறோம்.

பட்டினி சாவிலிருந்து எங்களை தற்காத்துக் கொள்ள ஊரடங்கு அமலில் இருக்கும் வரை குறைந்தபட்சம் தினசரி 4 மணி நேரமாவது பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும். அல்லது அனைவருக்கும் மாதம் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com