

சென்னை,
கொரோனாவின் பிடியில் சென்னை போலீஸ்துறையும் சிக்கி உள்ளது. நேற்றுமுன்தினம் வரை 1,597 போலீசார் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் புதிதாக 16 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சென்னை போலீசில் கொரோனா பாதிப்பு 1,613 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு ஒரு புறம் இருந்தாலும், வேகமாக குணம் அடைந்து போலீசார் பணிக்கு திரும்பி வருகிறார்கள். அந்த வகையில் சென்னை தலைமையக போலீஸ் இணை கமிஷனர் மகேஷ்வரி, உதவி கமிஷனர் ஜெரினா பேகம், 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 69 போலீசார் கொரோனாவை வென்று நேற்று பணிக்கு திரும்பினர்.
அவர்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் வரவேற்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டு, இணை கமிஷனர் உள்பட 69 போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் அமல்ராஜ், தேன்மொழி, டாக்டர் கண்ணன், அருண், தினகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கொரோனாவில் இருந்து குணம் அடைந்த போலீசாருக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீசாருக்கும் மூலிகைகள் அடங்கிய நவரச தேனீர் வழங்கப்பட்டது. தற்போது சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,192 ஆக உயர்ந்து உள்ளது.