பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால் கூடலூரில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால் கூடலூர் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால் கூடலூரில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
Published on

கூடலூர்,

கொரோனாவால் தமிழகத்தில் ஊரடங்கு காலம் வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மளிகை, காய்கறி கடைகள் பகல் 1 மணி வரை திறக்கப்பட்டு இருந்தது. தற்போது மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கட்டுமானம், மின்சாதன விற்பனை மற்றும் பழுதுபார்த்தல், செல்போன்கள், கணினிகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்தல் உள்பட பல கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள் செயல்பட்டு வந்தது. தற்போது காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட விதிவிலக்கு அளித்துள்ளது. இந்த நிலையில் காய்கறி, மளிகை கடைகள் மட்டுமே திறந்த நாட்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன இயக்கம் பரவலாக அதிகரித்து இருந்தது. தற்போது பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

கேரளா- கர்நாடக மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர் உள்ளதால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் சரக்கு லாரிகள் தினமும் அதிகளவு இயக்கப்படுகிறது. இதனால் ஊரடங்கு காலத்திலும் வாகன போக்குவரத்து தடையின்றி நடைபெற்று வருகிறது. இதனிடையே தளர்வுகளுடன் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு இல்லாத காலத்தில் காணப்படும் இயல்பு நிலைக்கு கூடலூர் திரும்பி உள்ளதை காண முடிந்தது. இதனிடையே டாஸ்மாக் கடைகளும் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளதால் மக்களின் வருகை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கம் நீடித்து வருவதால் ஊரடங்கை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இருப்பினும் அரசு சில தளர்வுகள் அளித்து கடைகள் திறக்க அனுமதி வழங்கி உள்ளதால் மக்கள் நடமாட்டம், வாகனங்களின் இயக்கம் என இயல்பு நிலைக்கு திரும்பிய உணர்வு ஏற்படுகிறது. ஆனால் வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்தால் மட்டுமே பொதுமக்களும் பாதுகாப்பாக வாழ முடியும். மேலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அரசு அளித்துள்ள தளர்வுகளை பாதுகாப்பாக கடைபிடித்தால் தொற்று பரவாமல் தடுக்கலாம். இதை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com