பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. தவறு செய்துவிட்டது - பிரகாஷ்காரத் பேச்சு

பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. தவறு செய்துவிட்டது, என்று திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரகாஷ்காரத் பேசினார்.
பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. தவறு செய்துவிட்டது - பிரகாஷ்காரத் பேச்சு
Published on

திண்டுக்கல்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி தலைமை தாங்கினார். பொதுக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்காரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு, தேர்தல் நிதி திரட்டுவதற்காக கடந்த ஆண்டு பத்திரங்கள் வாங்கும் திட்டத்தை உருவாக்கியது. அதன்மூலம் யாரும், எந்த கட்சிக்கு வேண்டுமானலும் நிதி அளிக்கலாம். அதில் நிதி கொடுத்தவர்கள், நிதி பெற்றவர்களின் விவரம் வெளியே தெரியாது. இதன்மூலம் சுமார் ரூ.500 கோடி தேர்தல் நிதி பத்திரங்கள் வாங்கப்பட்டன. அதில் 99.5 சதவீதம் பா.ஜனதா கட்சிக்கு தான் சென்றது.

அவ்வாறு நிதி அளிப்பதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆதாயம் பெறுகின்றன. அந்த வகையில் அனில் அம்பானிக்கு ரபேல் விமான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு ஹைடெக் ஊழல் ஆகும். 1952-க்கு பின்னர் முக்கியமான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டின் எதிர்காலம், ஜனநாயகம், மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டிய தேர்தல் இதுவாகும்.

ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே தலைவர் என்ற கோட்பாட்டை உருவாக்க முயற்சி நடக்கிறது. இந்தி, சமஸ்கிருதம், இந்துத்துவா கலாசாரம், மோடியே தலைவர் என்ற ரீதியில் மாற்ற பா.ஜனதா முயற்சி செய்கிறது. பசு பாதுகாப்பு எனக்கூறி பல மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்கள். ஆனால், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. சுமார் 88 லட்சம் பெண்கள் வேலை இழந்துள்ளனர். கிராமப்புற மக்களின் வருமானம் குறைந்துள்ளது. விவசாயிகளின் வருமானம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.

பா.ஜனதா அரசு, மக்கள் மீது நடத்திய மற்றொரு தாக்குதல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். பொருளாதார வளர்ச்சியும் வீழ்ந்தது. மேலும், பெண்களின் பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் பா.ஜனதா அரசு தோல்வி அடைந்துள்ளது. ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை, பா.ஜனதா அரசியல் ஆதாயமாக்க முயற்சி செய்கிறது.

எனவே, நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜனதா அரசை வீழ்த்த வேண்டும். இதற்காக தேர்தல் யுக்தியை உருவாக்கி இருக்கிறோம். அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா அரசுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்துள்ளோம். தமிழகத்தில் மதசார்பற்ற கட்சிகள் சேர்ந்து தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்.

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த பா.ஜனதாவுடன், கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அந்த கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள். அதற்கான பரிசை தேர்தலில் மக்கள் வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, காமராஜ், மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com