

கோவை,
கோவை மாநகர போலீஸ் அலுவலக வளாகத்தில் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஈமு கோழி மோசடி, ஏலச்சீட்டு மோசடி உள்பட பல்வேறு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.இந்த அலுவலகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டாக ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். 58 வயதான அவர் நேற்று ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால் அவரை, தமிழக டி.ஜி.பி. திரிபாதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் சேலம் குற்றப்பிரிவில் பணியாற்றியபோது அவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் வந்தன. அத்துடன் அவர் குற்றவாளிகளுடன் சேர்ந்து சுற்றுவதாகவும் புகார் கூறப்பட்டது.
மேலும் அவர் மீது ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கும் புகார் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் ஓய்வு பெறும் நாளில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.