ஆன்-லைனில் கல்வி கற்க முடியாததால் பள்ளி மாணவர்களுக்கு கோவிலில் பாடம் நடத்தும் வாலிபர் - முண்டுகோடு அருகே சம்பவம்

முண்டுகோடு அருகே ஆன்-லைனில் கல்வி கற்க முடியாத பள்ளி மாணவர்களுக்கு கோவிலில் வைத்து வாலிபர் பாடம் நடத்தி வருகிறார்.
ஆன்-லைனில் கல்வி கற்க முடியாததால் பள்ளி மாணவர்களுக்கு கோவிலில் பாடம் நடத்தும் வாலிபர் - முண்டுகோடு அருகே சம்பவம்
Published on

கார்வார்,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்-லைனில் மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கிராமப் புற மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் ஆன்-லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

இதுபோல் ஆன்-லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத மாணவ-மாணவிகளுக்கு வாலிபர் ஒருவர் சொந்த முயற்சியில் பாடம் கற்றுக்கொடுத்து வருகிறார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

உத்தரகன்னடா மாவட்டம் முண்டுகோடு தாலுகா நந்திகட்டா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் ராதாப்பூர். பி.யூ.சி. படித்துள்ள இவர் தொலைத்தொடர்பு துறையில் பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் கொரோனாவால் பள்ளிகள் தொடங்கப்படாததால், தனது கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் ஆன்-லைனில் பாடம் கற்க முடியாமல் சிரமப்பட்டு வந்தது சச்சினுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர், ஆன்-லைன் வகுப்பில் பாடம் கற்க முடியாத மாணவ-மாணவிகளுக்காக வகுப்பு நடத்த திட்டமிட்டார். அதன்படி அவர் கடந்த 2 மாதங்களாக அந்த கிராமத்தில் உள்ள கணபதி கோவிலில் வைத்து மாணவ-மாணவிகளுக்கு தினமும் வகுப்புகளை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து சச்சின் கூறுகையில், கொரோனாவால் மாணவர்களுக்கு ஆன்-லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான மாணவர்களிடம் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட செல்போன்கள் இல்லை. இதனால் அவர்கள் கல்வி கற்க முடியாமல் அவதிப்பட்டனர். இதைதொடர்ந்து நான் அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறேன். தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கல்வி கற்றுக்கொடுத்து வருகிறேன். என்னிடம் 4-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள். ஆன்-லைனில் வீடுகளில் இருந்தபடி குழந்தைகள் பாடம் கற்றுக்கொள்வது சிரமம். அதனால் கோவிலில் வைத்து அவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறேன் என்றார்.

கொரோனா காரணமாக கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் கிராமப்புற மாணவர்களுக்காக இலவசமாக கல்வி கற்றுக்கொடுத்து வரும் சச்சினின் செயலை கிராம மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து கிராமத்தின் இளைஞர் அணி தலைவரான சுனிலா கூறுகையில், கோவில் வளாகத்தில் வைத்து சச்சின் மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்து வருகிறார். மாணவ-மாணவிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து கல்வி கற்று வருகிறார்கள். மேலும் அவர்கள் அடிக்கடி சானிடைசர் மூலம் கைகளை கழுவி வருகிறார்கள். இதனால் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com