ஆந்திர அரசு ஒப்புதல் அளிக்காததால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பதில் தாமதம்

ஆந்திர அரசு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர அரசு ஒப்புதல் அளிக்காததால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பதில் தாமதம்
Published on

ஊத்துக்கோட்டை,

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கண்டலேறு அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு சாத்தியப்படவில்லை. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை ஒரே தவணையில் சாதனை அளவாக 8.060 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது.

அதன் பின்னர், கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. நீர் வரத்து இல்லாத காரணத்தால் பூண்டி ஏரி வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி தண்ணீர் திறந்து விட கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப கடந்த 14-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் நேற்று இரவு வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. கிருஷ்ணா நதிநீரை திறக்க ஆந்திர அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 16.75 அடியாக பதிவானது. வெறும் 63 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை. ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com