சாப்பிடுவதற்கு முன்னும்... பின்னும்...

நம் உடல் ஆரோக்கியத்துக்கு, சாப்பிடும் உணவுகள் மட்டுமின்றி, உணவு உண்ணும் முறையும் முக்கியம். எனவே அவை பற்றி அறிந்துகொள்வது அவசியம்.
சாப்பிடுவதற்கு முன்னும்... பின்னும்...
Published on

உண்ட உணவு ஜீரணமாவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும்போது ஜீரணத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால் ஜீரணக் கோளாறு ஏற்படும். எனவே சாப்பிட்டவுன் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல, சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யக்கூடாது. உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் ஜீரண உறுப்புகள் முறையாகச் செயல்பட, போதிய ரத்தம் கிடைக்காது. சாப்பிட்டு 3 அல்லது 4 மணி நேரத்துக்குப் பின்னர் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். பொதுவாக வெறும் வயிற்றில் உடற் பயிற்சி செய்வதே நல்லது. காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால், ஜீரண உறுப்புக் களால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக்கொள்ள முடியாது.

சாப்பிட்டவுடன் குளிக்கவும் கூடாது. இதனால் கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்று, ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. நாளடைவில் ஜீரண உறுப்புக்கள் வலுவிழந்துவிடும். குளித்தால் முக்கால் மணி நேரத்துக்குப் பிறகுதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகுதான் குளிக்க வேண்டும். உருளைக் கிழங்கு சிப்ஸ், அப்பளம், ஊறுகாய் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் சாப்பிட வேண்டும்.

சாப்பாட்டுக்கு முன் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால் உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்கக் கூடுதல் நேரமாகும். உண்ட உணவு செரிக்காத நிலையில், பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். சாப்பிட்டு சில மணி நேரங்கள் கழிந்தபிறகே பழங்கள் சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்துக்கு முன் பழம் சாப்பிட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com