கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கர், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல்மைதீன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பிலால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழரசு, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன் ஆகியோர் தலைமையில் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கவேண்டும். தீண்டாமை சுவர் முழுவதும் இடிக்கப்படவேண்டும். இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார், சமூக சமத்துவ முன்னணி தலைவர் கார்க்கி உள்ளிட்ட 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கூறி உள்ளனர்.

அகில இந்திய பறையர் பேரவையினர் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சத்யாமுருகன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், சேரன்மாதேவி அருகே மேலஓமநல்லூரில் உள்ள சாலைகளை சீரமைக்கவேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றவேண்டும். புறகாவல்நிலையம் அமைக்கவேண்டும். பொது சுகாதார வளாகம் அமைத்துதரவேண்டும், பஸ்வசதி, மருத்துவமனை வசதி செய்து தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.

களக்காடு அருகே உள்ள படலையார்குளம் செட்டிமேடு கிராம மக்கள் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன், அப்பாத்துரை ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், படலையார்குளம் செட்டிமேடு கிராம மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லை டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் 50 பேர் நேற்று கலெக்டர் அலுவலத்திற்கு வந்து தங்களுக்கு இலவச மடிக்கணினி கேட்டு மனு கொடுத்தனர்.

கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறை பகுதியில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நெல்லை டவுன் உழவர் சந்தையில் திட்டமிட்டப்படி தினசரி காய்கறி சந்தை அமைக்கவேண்டும் என்று மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

நெல்லை பழையபேட்டையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியை, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவேண்டும் என்று பழையபேட்டை பகுதி மக்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவி ராஜலட்சுமி தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

நெல்லை தச்சநல்லூர் உலகம்மன் கோவில் அருகே மதுரை-நெல்லை பைபாஸ் ரோட்டில் சுரங்கபாதை அமைத்து தரவேண்டும் என்று கூறி அந்த பகுதி மக்கள், கரும் புலிகள் குயிலி பேரவை தலைவி மாடத்தி தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு கண்டியப்பேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள கண்டியப்பேரி குளத்தின் கரையை பலப்படுத்தவேண்டும் என்று மனு கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com