கலெக்டர் அலுவலகம் முன்பு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறி தொழிலாளர்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து 11-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், விசைத்தறி துணிகள் உற்பத்தி முடங்கி உள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பங்கள் வருவாய் இன்றி பரிதவித்து வருகின்றனர். வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மனு அளிக்க முடிவு செய்தனர்.

அதன்படி, சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் இருந்து விசைத்தறி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஆட்டோக்களில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். செயலாளர்கள் செங்கொடி செல்வம், காமராஜ், துணைத்தலைவர் திருமலை மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரத்தில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த மாதம் 31-ந்தேதியோடு பழைய ஒப்பந்தம் முடிவடைந்ததால் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தித்தர வேண்டும். அதில் 50 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். தொழிற்கூடங்களில் குடிநீர் வசதி அமைக்க வேண்டும். தேசிய விடுமுறை நாட்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். அனைத்து சார்பு தொழிலாளர்களுக்கும் 50 சதவீதம் கூலி ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். நிர்வாகத்தின் காரணமாக ஏற்படும் வேலை இழப்புக்கு சம்பளம் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., பஞ்சப்படி, காப்பீடு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இதுகுறித்து நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com