கோடைகாலத்துக்கு முன்பே சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்தது

கோடைகாலத்துக்கு முன்பே சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்து விட்டதால் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர்.
கோடைகாலத்துக்கு முன்பே சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்தது
Published on

உத்தமபாளையம்,

தேனி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலாதலமாகவும், புண்ணியஸ்தலமாகவும் சுருளி அருவி விளங்குகிறது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவியில் நீராடி விட்டு, இறந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வருகின்றனர்.

சுருளி அருவிக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து வரும் உபரிநீர் அடர்ந்த மலைப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து அருவியாக கொட்டுகிறது. கோடைகாலத்திலும் அருவியில் தண்ணீர் வற்றாமல் வந்து கொண்டு இருந்தது. கடந்த ஆண்டு தூவானம் ஏரியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதனால் அருவிக்கு வரும் உபரி தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து சுருளி அருவிக்கு மழை பெய்தால் மட்டும் தண்ணீர் வரத்து இருக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. கடந்த சில மாதங்களாக மழைநீர் மட்டும் அருவிக்கு வந்து கொண்டு இருந்தது. தற்போது மழை பெய்யாததால் கோடை காலம் தொடங்கும் முன்பே அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்த அளவிலேயே வருகிறது. இதனால் நேற்று சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து சென்றனர்.

இதேநிலை நீடித்தால் இன்னும் இரண்டு தினங்களில் தண்ணீர் முற்றிலும் நின்று விடும். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையும் நிலை உருவாகும். வனத்துறைக்கும், மின்வாரியத்துறைக்கும் ஏற்பட்டுள்ள மோதலால் தூவானம் ஏரியில் இருந்து சுருளி அருவிக்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

சுருளி அருவிக்கு பல ஆண்டு காலமாக தூவானம் ஏரியில் இருந்து உபரி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அதனை நீடிக்கச்செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com