திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3,200 பேர் கைது

திருப்பூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3 ஆயிரத்து 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3,200 பேர் கைது
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. 1-4-2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறையில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஓட்டுனர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

4-வது நாளான நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் திருப்பூர் மாவட்ட அளவில் மறியல் போராட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

போராட்டத்துக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், ஒருங்கிணைப்பாளர்கள் கனகராஜா, ராஜேந்திரன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாக்கியம் மற்றும் அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

மறியல் நடந்த பகுதிக்கு தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாநகர தி.மு.க. செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், அ.ம.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில செயலாளர் நடேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பல்லடம் ரோட்டில் ஆசிரியர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிலர் ரோட்டில் படுத்து மறியலில் ஈடுபட்டார்கள். பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.

மறியலில் ஈடுபட்டவர்களை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள 2 திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இதில் மொத்தம் 1,000 ஆண்கள், 2,200 பெண்கள் உள்பட மொத்தம் 3,200 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் 40 சதவீத அரசு ஊழியர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் 72 சதவீதம் பேர் பணிக்கு செல்லவில்லை.

பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. ஆசிரியர்கள் இல்லாத அரசு பள்ளிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com