

நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். முன்னதாக விஷம் குடித்த தம்பதியினருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று மனு கொடுப்பதற்காக வந்த தென்காசி அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தானும் தீக்குளித்தார். கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து இந்த முடிவை தேடிக்கொண்டார்.
தீக்குளித்த 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்தது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவருடைய மனைவி திவ்ய பிரியதர்ஷினி(வயது 27). இவர்கள் இருவரும் தங்களுடைய குழந்தைகள் காவிய பிரியா, கார்த்திகேயன் ஆகியோருடன் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், தாங்கள் 4 பேரும் தற்கொலை செய்யப்போவதாக கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களை எச்சரித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து திவ்ய பிரியதர்ஷினி பெயரில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய தாய் பேரின்பம், பெங்களூருவில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து அவருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்த தொகையை என்னுடைய தாயின் சகோதரர்கள் போலி சான்றிதழ்கள் கொடுத்து அபகரித்து விட்டனர். மேலும் எனது சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டனர்.
எனவே அந்த பணம், சொத்துக்களை மீட்டு தருவதோடு, போலி சான்றிதழ்கள் வழங்கிய அதிகாரிகள் மீதும், அதை வாங்கி மோசடி செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே 3 முறை மனு கொடுத்துள்ளேன். தற்போது 4-வது முறையாக மனு கொடுக்க வந்துள்ளேன். இந்த மனுவை கொடுத்துவிட்டு நாங்கள் 4 பேரும் குடும்பத்துடன் தற்கொலை செய்ய உள்ளோம்.
இதையடுத்து போலீசார் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 4 பேரையும் அழைத்து தற்கொலை முயற்சியை கைவிட வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்தது ஆகும். எனவே அங்குள்ள வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க இந்த மனுவை பரிந்துரை செய்வோம் என்றனர்.
இருந்தபோதிலும் அசோக்குமார் தனது கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவாறு போலீசாரிடம் பேசி வந்தார். இதை தொடர்ந்து போலீசார், 4 பேரையும் கலெக்டர் அலுவலக வளாகத்தை விட்டு வெளியே அனுப்பி வைத்தனர்.
ஆனால் இந்த பிரச்சினை அத்தோடு நிற்கவில்லை. அசோக்குமார் குடும்பத்துடன் மாலையில் மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பிரதான நுழைவு வாசல் பகுதியில் உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அருகில் மூடிக்கிடக்கும் மற்றொரு நுழைவு வாசல் பகுதிக்கு வந்தனர். அங்கு யாரும் எதிர்பாராத வகையில் அசோக்குமாரும், திவ்ய பிரியதர்ஷினியும் விஷம் குடித்தனர். இதுதவிர அசோக்குமார், பிரியதர்ஷினி ஆகியோர் தங்களுடைய 2 குழந்தைகள் மீதும், தங்கள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்தனர். உடனடியாக அருகில் சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் தயார் நிலையில் நின்ற போலீஸ் வேனில் ஏற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு விஷம் குடித்த தம்பதியினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அசோக்குமாரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மண்எண்ணெய் உடலில் சிந்தியதால் குழந்தைகள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினரிடம் விளக்கம் கேட்டனர். பின்னர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மீண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.