அரசு மரியாதையுடன் மறைந்த சமூகசேவகி நரசம்மா உடல் அடக்கம் - மந்திரிகள், பெண்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்

அரசு மரியாதையுடன் மறைந்த சமூகசேவகி நரசம்மா உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அரசு மரியாதையுடன் மறைந்த சமூகசேவகி நரசம்மா உடல் அடக்கம் - மந்திரிகள், பெண்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்
Published on

துமகூரு,

மறைந்த சமூகசேவகி நரசம்மா உடல் அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான துமகூரு அருகே கிருஷ்ணாபுராவில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு மந்திரிகள், பெண்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா கிருஷ்ணாபுராவை சேர்ந்தவர் சூலகித்தி நரசம்மா (வயது 98). சமூகசேவகியான அவர் தனது அனுபவத்தின் அடிப்படையில் கிராமப்புறங்களில் 70 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வெற்றிகரமாக இலவசமாக பிரசவம் பார்த்துள்ளார். இந்த சேவைக்காக அவருக்கு நடப்பு ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

இந்த நிலையில் வயோதிகம் காரணமாக அவர் நோய்வாய்பட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் இறந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் துமகூரு மாவட்ட நிர்வாகம் சார்பில் நரசம்மாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக துமகூரு அம்மனகெரேயில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மந்திரிகள் யு.டி.காதர், ஆர்.பி.திம்மாப்பூர், கலெக்டர் ராகேஷ்குமார் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரிடம் பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து நரசம்மா உடலுக்கு கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு நரசம்மாவின் உடல் அவரது சொந்த ஊரான கிருஷ்ணாபுராவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com