தர்மபுரி அருகே பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரெயில் தடம் புரண்டது பெரும் விபத்து தவிர்ப்பு

தர்மபுரி அருகே பெங்களூரு- காரைக்கால் பயணிகள் ரெயில் தடம் புரண்டது. மேலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தர்மபுரி அருகே பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரெயில் தடம் புரண்டது பெரும் விபத்து தவிர்ப்பு
Published on

பாலக்கோடு,

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக காரைக்காலுக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று காலை வழக்கம் போல பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வந்தது. காலை 9.45 மணி அளவில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காடுசெட்டிப்பட்டி பகுதிக்கு வந்தது. அங்குள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள கிராசிங்கை ரெயில் கடக்க முயன்ற போது ரெயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தண்டவாளத்தில் இருந்து ரெயிலின் சக்கரம் கீழே இறங்கி தடம் புரண்டது.

இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அலறினர். இதை அறிந்த என்ஜின் டிரைவர் சுதாரித்து கொண்டு ரெயிலின் வேகத்தை படிப்படியாக குறைந்து நிறுத்தினார். இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர், பெங்களூருவில் உள்ள தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ரெயில்வே என்ஜினீயர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் காடுசெட்டிப்பட்டிக்கு விரைந்து வந்தனர்.

மீட்பு குழுவினர்

மேலும், ஓசூரில் இருந்து மாற்று ரெயில் என்ஜின் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் மதியம், 1.20 மணிக்கு, ரெயில் பெட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து பஸ்கள் மூலம் தங்களது ஊர்களுக்கு பயணிகள் புறப்பட்டு சென்றனர். இதனால் பயணிகள் 3 மணி நேரத்துக்கு மேல் தவித்தனர்.

இதனிடையே தர்மபுரி, சேலம், ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ரெயில்வே விபத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் தடம்புரண்ட ரெயில் என்ஜின் கிரேன் மூலம் தண்டவாளத்தில் நிறுத்தும் பணி நடந்தது. ரெயில் தடம் புரண்ட பகுதியை கோவையில் இருந்து புறப்படும் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 11014) கடக்கும் என்பதால், அந்த ரெயில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் சேலத்தில் இருந்து மாற்று வழியாக, மொரப்பூர், ஜோலார்பேட்டை வழியாக பெங்களூருக்கு அந்த ரெயில் திருப்பி விடப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் ரெயில் என்ஜின் தடம் புரண்ட இடத்தில், தண்டவாளத்தில் இருந்து இரும்பு துண்டு துண்டிக்கப்பட்டு விழுந்ததால், அதை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். காடுசெட்டிப்பட்டி வனப்பகுதியில் மிக குறுகிய வளைவு கொண்ட பகுதி என்பதால் ரெயிலின் என்ஜினின் முன் சக்கரத்தில் உள்ள பக்கவாட்டு தகடு கழன்று விழுந்ததால், என்ஜினின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரெயில்வே கிராசிங் பகுதியில் ரெயில் தடம் புரண்டு நின்றதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த விபத்து குறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் என்ஜின் டிரைவர் சிறப்பாக செயல்பட்டு ரெயிலின் வேகத்தை படிப்படியாக குறைத்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com