விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் விபத்து அபாயம்

விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில், சேவை ரோடு சீரமைப்பு பணிகள் நடைபெறாததால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் விபத்து அபாயம்
Published on

விருதுநகர்,

விருதுநகர்-சாத்தூர் இடையே நான்குவழிச்சாலையில் கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் ஆர்.ஆர்.நகரில் மேம்பாலங்கள் உள்ளன. இந்த மேம்பாலங்களின் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க வேண்டும் என பலமுறை சுட்டிக்காட்டப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல இடங்களில் தடுப்பு வேலிகள் சேதமடைந்து வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நிலை உள்ளது.

மேலும் சேவை ரோடுகள் கிராமங்களின் விலக்கு பகுதிகளில் சேதமடைந்து வாகனங்கள் செல்ல தகுதியில்லாத நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்கும் பணி நடைபெறாததால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

மேலும் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் சாத்தூர் படந்தால் விலக்கு ஆகிய 2 இடங்களிலும் விபத்துகளை தவிர்க்க நடை மேம்பாலங்கள் அமைக்க கடந்த 2014-ம் ஆண்டே மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது.

இந்த பிரச்சினை குறித்து ஆய்வுக்கு வந்த மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் சுட்டிகாட்டியபோது அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆண்டு இறுதியிலேயே ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதிகளில் வாகன விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி விட்டது.

நான்குவழிச்சாலை அமைப்பு பணியின்போது விருதுநகரின் வடபுறம் சாலையின் இருபுறங்களிலும் இருந்த மழைநீர் வடிகால்களை நெடுஞ்சாலைதுறை ஆணையம் அடைத்துவிட்டதால் மழை பெய்யும்போது சாலையிலும், சாலையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே இப்பகுதியில் மழைநீர் வடிகால்களை 1 மீட்டர் அகலத்தில் அமைத்து தர வேண்டும் என்றும், சிவகாசி சாலை சந்திப்பில் மழைநீர் தேங்காமல் இருக்க சாலையை சீரமைத்து தர வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தி கூறியும் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இதற்கான நடவடிக்கை ஏதும் எடுப்பதாக தெரியவில்லை. இதனால் விருதுநகர் போக்குவரத்து பணிமனை முன்பு அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலியாகும் நிலை உள்ளது.

எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் விருதுநகர்-சாத்தூர் இடையே வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையில் சாலை சீரமைப்பு பணி, சேவை ரோடு அமைப்பு பணி மற்றும் நடை மேம்பாலம் கட்டுமான பணி ஆகியவற்றை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இல்லையேல் விபத்துகளை தவிர்ப்பதற்காகவே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பாராமுக செயல்பாட்டால் விபத்துகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com