

ஆவுடையார்கோவில்,
தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. மெடிக்கல், பாலகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டானி கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்படுவதாக ஆவுடையார்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது, நாட்டானி கிராமத்திலிருந்து நிலையூர் கிராமம் வரை 10 கிலோ மீட்டர் தூரம் வரை 8 மாட்டு வண்டிகள் பந்தயம் விட்டனர். இதற்கிடையில் போலீசார் வருவதை அறிந்த அவர்கள் மாடுகளை அவிழ்த்துவிட்டு வண்டிகளை இழுத்து சென்றனர்.
இதில் 3 மாட்டு வண்டிகள் மட்டும் போலீசாரிடம் சிக்கின. இது தொடர்பாக 15 பேர்கள் மீது ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.