

ஊத்துக்கோட்டை,
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு வரும் 24-ந் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அதிலும் ஞாயிற்றுகிழமைகளில் எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது.
இதன் காரணமாக நேற்று ஊத்துக்கோட்டையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மட்டும் இயங்கின. இதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெரும்பாலான பகுதிகளில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் தகுந்த ஆவணங்களுடன் இயக்கப்பட்டன.
முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டதால் வீடுகளிலேயே முடங்கினர். முழு ஊரடங்கு தடையை மீறி தேவையின்றி வெளியே சுற்றியவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், முரளி ஆகியோர் போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழக-ஆந்திர மாநில எல்லையான திருப்பதி-நெல்லூர் சாலையில் தீவிர வாகன சோதனைக்கு பிறகு அதாவது இ-பதிவு முறை இருந்தால் மட்டுமே வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்தார்.