விவசாயிகள் சார்பில் ‘பாரத் பந்த்’: விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

விவசாயிகள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடியபோதிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
விவசாயிகள் சார்பில் ‘பாரத் பந்த்’: விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
Published on

விழுப்புரம்,

மத்திய அரசு நிறைவேற்றிய 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பாரத் பந்த் என நாடுதழுவிய முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகத்தில் முழுஅடைப்புக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் இயங்காமல் பூட்டிக்கிடந்தன. பால் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கின. பெட்ரோல் நிலையங்களும் இயங்கின. காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் என பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்ததால் மார்க்கெட் பகுதிகள், கடைவீதிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

பஸ்கள் ஓடின

மேலும் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி. உள்பட 16 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏற்கனவே விடுப்பில் இருப்போரையும் உடனடியாக பணிக்கு வரவழைத்து அவர்கள் மூலமாக அரசு பஸ்களை தடையின்றி இயக்க ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாதவாறு அவர்களின் தேவைக்கேற்ப அரசு பஸ்களை தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாவட்டங்களுக்கும் 2,700 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் தமிழக பஸ்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில எல்லை வரை பஸ்கள் சென்று திரும்பின என்றார். ரெயில் சேவையிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் வழக்கம்போல் ரெயில்கள் ஓடின.

வெறிச்சோடிய சாலைகள்

மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பஸ்கள் ஓடவில்லை. சில தனியார் பஸ்கள் மட்டுமே ஓடின. இதுதவிர கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வேன், லாரி, சரக்கு வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் சற்று வெறிச்சோடிய நிலையிலேயே காட்சியளித்தது.

இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com