பாரதீய ஜனதா அரசு காங்கிரஸ் கட்சி தலைவர்களை திட்டமிட்டு பழி வாங்கி வருகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு காங்கிரஸ் கட்சி தலைவர்களை திட்டமிட்டு பழி வாங்கி வருகிறது என முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
பாரதீய ஜனதா அரசு காங்கிரஸ் கட்சி தலைவர்களை திட்டமிட்டு பழி வாங்கி வருகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதி மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் பொறுப்பு வகித்த ப.சிதம்பரம் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு பொய் வழக்கு போட்டு கைது செய்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய்தத், காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்கள். முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி, புதுவை அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

மோடியையும், கிரண்பெடியையும் எதிர்த்து போராடி நமது உரிமைகளை பெற்று வருகிறோம். கடந்த 2008-ம் ஆண்டு உலக பொருளாதாரம் சரிந்து இருந்தபோது இந்தியாவின் பொருளாதாரத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஆகியோர் உயர்த்தி காட்டினர்.

ப.சிதம்பரம் விதிமுறைப்படி செயல்படுபவர். தலை சிறந்த வக்கீல். ப.சிதம்பரம் மீது எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டையும் கூற முடியாது. எந்தவொரு முகாந்திரமுமின்றி அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு பழிவாங்கும் நோக்கில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள். பா.ஜ.க.அரசு காங்கிரஸ் கட்சி தலைவர்களை திட்டமிட்டு பழி வாங்கி வருகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு பா.ஜனதா கட்சியின் செயலை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

கவர்னர் கிரண்பெடி பொதுமக்களுக்கான திட்டங்களை தடுக்கிறார். அரசுக்கு கெட்டபெயர் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். கட்சிக்காகவும், கட்சியின் தலைவர்களுக்காகவும் காங்கிரஸ் தொண்டர்கள் ரத்தம் சிந்தவும் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com