நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

நெல்லையப்பர் கோவிலில் நேற்று பத்ர தீபவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
Published on

நெல்லை,

நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் பத்ர தீபவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் வேணுவனநாதருக்கு (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்ர ஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது.

ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் உற்சவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு ஹோமம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு நெல்லையப்பர் கோவில் மணிமண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று மாலை பத்ர தீபம் ஏற்பட்டது. இதையொட்டி ஆறுமுக நயினார் சன்னதியில் மகேஸ்வர பூஜை நடந்தது. பின்னர் தங்க விளக்கு தீப ஒளியில் இருந்து சுவாமி சன்னதி உள் பிரகாரம், வெளி பிரகாரம், அம்மன் சன்னதி உள்ளிட்டவைகளில் தீபம் ஏற்றப்பட்டது. கோவிலில் 10 ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றப்பட்டன.

நந்தி சன்னதி முன்பு பத்ர தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வந்தனர்.

பத்ர தீப விழாவையொட்டி நெல்லையப்பர் கோவில் நின்ற சீர் நெடுமாறன் அரங்கத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நெல்லை இந்து ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com