1,610 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் அமைச்சர்-எம்.பி. வழங்கினர்

1,610 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
1,610 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் அமைச்சர்-எம்.பி. வழங்கினர்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை கல்லுக்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். முதன்மைக்கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு 6 பள்ளிகளை சேர்ந்த 1,610 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் துரைக்கண்ணு பேசும்போது, தஞ்சை மாவட்டத்தில் ரூ.7 கோடியே 80 லட்சத்து 54 ஆயிரத்து 522 மதிப்பில் 19 ஆயிரத்து 824 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. உங்கள் வாழ்க்கை உயர்வுக்கு அடிப்படையானது கல்வி தான். நீங்கள் எண்ணங்களை சிதறவிடாமல் பெற்றோர்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இலக்கை அடைய வேண்டும்

வைத்திலிங்கம் எம்.பி. பேசும்போது, பெண்கள் படித்தால் சமுதாயமே வளர்ச்சி அடையும் என்பதால் அவர்கள் கல்வி கற்க ஊக்குவிக்கும் வகையில் முதலில் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. பின்னர் அது மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. கல்வி கற்காதவன் குருடனுக்கு சமம். கல்வி வளர்ச்சிக்காக பல அற்புதமான திட்டங்களை தமிழகஅரசு செயல்படுத்தி வருகிறது. தோல்வி அடைந்தால் மனம் தளரக்கூடாது. தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டு என உணர்ந்து படிக்க வேண்டும். பலமுறை தோல்வி அடைந்தவர்கள் தான் இன்றைக்கு பல்வேறு துறைகளில் வல்லுனர்களாக திகழ்கின்றனர். எனவே தோல்வியை கண்டு பயப்படாமல் முயற்சி செய்து உங்கள் இலக்கை அடைய வேண்டும் என்றார்.

விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சரவணன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com