மந்திரி நாகேசை பா.ஜனதாவினர் கடத்தி சென்றனர், மும்பையில் எம்.எல்.ஏ.க்கள் துப்பாக்கி முனையில் உள்ளனர் - டி.கே.சிவக்குமார் பேட்டி

மந்திரி நாகேசை பா.ஜனதாவினர் மும்பைக்கு கடத்தி சென்றுவிட்டனர் என்றும், மும்பையில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் துப்பாக்கி முனையில் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். பெங்களூருவில் நேற்று நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
மந்திரி நாகேசை பா.ஜனதாவினர் கடத்தி சென்றனர், மும்பையில் எம்.எல்.ஏ.க்கள் துப்பாக்கி முனையில் உள்ளனர் - டி.கே.சிவக்குமார் பேட்டி
Published on

பெங்களூரு,

கூட்டணி அரசின் முதல்-மந்திரி குமாரசாமியின் கரத்தை வலுப்படுத்தவும், காங்கிரஸ் கட்சி நலனுக்காகவும் மந்திரிகள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எந்த சூழ்நிலை வந்தாலும் கூட்டணி அரசை காப்பாற்ற நாங்கள் முயற்சிப்போம். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்.

கூட்டணி அரசின் பலம் குறைந்தது எனக்கூறுவது சரியாக இருக்காது. கூட்டணி அரசின் பலம் குறையவில்லை. கூட்டணி அரசு தொடர்ந்து செயல்படும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனென்றால் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதுடன் அனைத்தும் முடிந்துபோவது இல்லை. சட்ட போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இன்னும் பல்வேறு நடைமுறைகள் இருக்கிறது.

எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மீண்டும் வருவார்கள். எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியை வளர்த்தவர். அவர் கட்சியின் சிப்பாய். அமலாக்கத்துறை, சி.பி.ஐ. பெயரை கூறியும், துப்பாக்கி முனையிலும் மும்பையில் உள்ள கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மிரட்டப்படுகிறார்கள். பகிர்வு, பாதுகாப்பு முறைகள் காங்கிரஸ் கட்சியில் உள்ளது. மும்பையில் உள்ள நண்பர்கள்(அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) தாங்களும் மந்திரியாக செயல்பட ஒரு வாய்ப்பு வழங்கும்படி கூறினர். அவர் களுக்கும் வாய்ப்பு வழங்க இருக்கிறோம்.

நாங்கள் ஏதேனும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டால் தண்டனை கொடுக்கட்டும். நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எனக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தெரியாது.

முல்பாகல் சுயேச்சை எம்.எல்.ஏ.வும், மந்திரியுமான நாகேஷ் எனக்கு போன் செய்து பேசினார். அப்போது மந்திரி பதவியை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்து பா.ஜனதாவினர் என்னை மும்பைக்கு கடத்தி செல்கின்றனர். உடனடியாக வந்து என்னை மீட்டு செல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து நான் நாராயணசாமி மற்றும் வி.முனியப்பா ஆகியோருடன் விமான நிலையத்துக்கு விரைந்தேன். ஆனால் நான் விமான நிலையத்துக்கு செல்லும் முன்பு விமானம் புறப்பட்டு சென்றுவிட்டது.

இதன்மூலம் ஆட்சி அதிகாரத்துக்காக பா.ஜனதா எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. விரைவில் நாகேஷ், காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவார். நாகேஷ் தனது மந்திரி பதவிக்கான ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவார்.

ஜனநாயக முறைப்படி பா.ஜனதாவினர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கு அழுத்தம் கொடுத்து ராஜினாமா செய்ய வைப்பது சரியில்லை. அவ்வாறு செய்தாலும் கூட அதை பா.ஜனதா ஏற்றுக்கொள்ள மறுத்து மோசமான அரசியலை செய்கிறது.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com