நாட்டின் பொருளாதாரத்தில் பா.ஜ.க.வினர் கவனம் செலுத்தவில்லை - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

பா.ஜ.க.வினர் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் பா.ஜ.க.வினர் கவனம் செலுத்தவில்லை - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
Published on

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க.வினர் நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மிகப்பெரிய பின்னடைவுக்கு கொண்டு வந்துவிடும் என நாங்கள் சொல்லிக்கொண்டு வருகிறோம். ஆனால் அவர்கள் யாரும் அதை கவனத்தில் எடுக்கவில்லை. இப்பொழுது அந்த வரியை குறைக்கிறோம் என கூறுகின்றனர். பாதிப்பு ஏற்பட்டதால் தான் அதை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சியை நினைக்கும்போது பதற்றமாகவும், பயமாகவும் இருக்கிறது. அதனை எப்படி சரி செய்யப் போகிறோம் என தெரியவில்லை என்று சுப்பிரமணியசாமி கூறுவது சரிதான். தமிழிசைக்கு நீண்ட காலமாக அரசியலில் அனுபவம் இருக்கிறது. ஒரு கட்சியின் மூத்த தலைவராக அவர் இருந்து உள்ளார். எனவே அவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த கட்சி கவர்னராக தேர்வு செய்துள்ளது.

வங்கிகள் இணைப்பு விஷயத்தில் அவசரப்பட்டு விட்டார்கள் என்று சுப்பிரமணியசாமி கூறியது சரி தான். தற்போது அனைத்தையும் தனியார்மயப்படுத்தி வந்து கொண்டிருக்கின்றனர். ஆயுத உற்பத்தி தொழிற்சாலை, ரெயில்வே துறை ஆகியவை தனியார்மயம் ஆகிறது. ஆயுத உற்பத்தி தனியாரிடம் சென்றால் முதலாளிகள் லாபத்தை நினைத்து தான் முதலீடு செய்வார்கள். மக்களை நம்பி யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள். எனவே அவர்கள் எந்த தரத்தில் உற்பத்தி செய்வார்கள் என்பது யாருக்கு தெரியும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்துங்கள் என்று நீதிமன்றமே பலமுறை வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்த அரசு, காலம் கடத்திக் கொண்டே செல்கிறது. அவர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வெற்றி மேல் நம்பிக்கை இல்லாததால் தோல்வி நிகழ்ந்துவிடுமோ என்ற பயம் இருக்கிறது. எனவே தான் தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் சீமான், மதுரை ஆதினத்தை சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல்நிலை பற்றி அவர் கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com