கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்
Published on

செம்பட்டு,

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஏற்கனவே பா.ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது. கட்டண உயர்வை படிப்படியாக ஏற்றி இருக்க வேண்டும். இப்படி ஒரேயடியாக ஏற்றினால் யார் தான் ஏற்றுக்கொள்வார்கள். பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசு நிர்ணயிப்பது கிடையாது. அது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்கு தகுந்தபடி அமைகிற விஷயம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காதது குறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது வேண்டுமென்றே நிகழ்ந்தது அல்ல. அவர் தியானத்தில் இருந்துள்ளார். இதனை நான் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் எந்நேரமும் தியானத்தில் இருப்பவர்கள். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் பா.ஜனதாவோ, விஜயேந்திரர் சுவாமிகளோ சளைத்தவர்கள் அல்ல. ஆண்டாள் பற்றி கருத்து தெரிவித்த வைரமுத்து தனிப்பட்ட நபர்களிடமோ, தனி அமைப்புகளிடமோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறவில்லை. அவர் ஆண்டாளை தனது தாய் என்று கூறி உள்ளார். அப்படியானால் தன் தாயிடம் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்க போகிறது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் அவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றெல்லாம் கூறக்கூடாது. ஏனென்றால் அந்த நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி இங்கு வருகிறார்கள். அவர்களுடைய படகுகளையும் நாம் பிடிக்கிறோம். இதனையெல்லாம் மனிதாபிமான கண்ணோட்டத்தோடு தான் பார்க்க வேண்டும். மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, மீனவர்களின் பிரச்சினைக்காக எத்தனை முறை அமர்ந்து பேசி இருக்கிறார்கள்.

ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு, இருநாட்டு மீனவர்களும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். மீனவர்கள் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ.க.வின் எடியூரப்பா அரசு அமைந்தால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி சுற்றுலா மாளிகையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் தங்களை இணைத்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com