உத்தவ் தாக்கரேயுடன் பா.ஜனதா மந்திரி சந்திப்பு : மராத்தா இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு கோரினார்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை பா.ஜனதா மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சந்தித்து பேசினார். அப்போது மராத்தா இடஒதுக்கீடு மசோதவுக்கு அவர் ஆதரவு கோரினார்.
உத்தவ் தாக்கரேயுடன் பா.ஜனதா மந்திரி சந்திப்பு : மராத்தா இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு கோரினார்
Published on

மும்பை,

மும்பை பாந்திராவில் உள்ள மதோஸ்ரீ இல்லத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை, பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவரும், மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மராத்தா இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு அளிக்கக்கோரி நான் ஏற்கனவே மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்து பேசினேன்.

தற்போது சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து மசோதாவுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன். உத்தவ் தாக்கரே மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மராத்தா இடஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆனால் இந்த இடஒதுக்கீடு காரணமாக மற்ற சமுதாயத்தினர் பாதிக்கப்படக்கூடாது என்றும் இந்த சந்திப்பின்போது அரசை உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதேபோல் தங்கர் சமுதாய மக்களின் கோரிக்கையையும் நிறைவேற்றும் படியும் அவர் வலியுறுத்தியதாக சிவசேனா கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் நேற்று மேல்-சபையில் எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அளித்த பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இடஒதுக்கீடு மசோதா மீதும் விவாதம் நடத்த போதுமான கால அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் சட்டசபை கூட்டம் நீட்டிக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com