கொரோனா காலகட்டத்தில் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

கொரோனா காலகட்டத்தில் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா காலகட்டத்தில் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
Published on

மயிலாடுதுறை,

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இன்று (திங்கட்கிழமை) முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதனை கண்டித்து பா.ஜ.க.வினர் தங்கள் வீடுகளின் வாசலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. மயிலாடுதுறை கீழே நாஞ்சில் நாடு பகுதியில் பா.ஜனதாவின் தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில செயலாளர் நாஞ்சில் பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடைகளை உடனே மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில மகளிர் அணி துணைத்தலைவர் முத்துலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல நகர பா.ஜ.க. அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மோடி கண்ணன் தலைமை தாங்கினார். இதில் மத்திய அரசு தலைமை வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் முட்டம் செந்தில், மாவட்ட இளைஞரணி தலைவர் பாரதி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் பல இடங்களில் பா.ஜனதாவினர் தங்கள் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சீர்காழி

சீர்காழியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தமிழக அரசு மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சீர்காழி நகர தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் இராம.சிவசங்கர் கலந்து கொண்டு பேசினார்.

நகர பொதுச் செயலாளர் நடராஜன், இளைஞரணி பொறுப்பாளர்கள் சுசீந்திரன், புவனேஸ்வரன், அமைப்பு சாரா பிரிவு பொறுப்பாளர் அன்புசெல்வன், தொழில்நுட்ப பிரிவு நகர தலைவர் மணிமாறன், மகளிர் அணி பொறுப்பாளர்கள் தீபா மற்றும் மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவெண்காடு

திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் அருள்ராஜன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. செயலாளர் துரைசெழியன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் திருவெண்காடு, மங்கைமடம், திருநகரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com