

மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பொருளாதார முடக்கத்தை நீக்கும் வகையில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டன. ஆனால் வழிபாட்டு தலங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி கடந்த மாதம் பா.ஜனதா கோவில்கள் முன் மணி அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டது. பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியும் போராட்டம் செய்தது.
ஆனால் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்த முடிவை அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி வருகிற 13-ந் தேதி பல்வேறு மத அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளது. இதற்கு பா.ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுக்கடைகள், பார்கள் போன்றவை திறந்து இருக்க மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் 7 மாதங்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்களை மட்டும் அரசு மூடியே வைத்து உள்ளது. எனவே மத அமைப்புகள் நடத்தும் போராட்டத்துக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவிக்கிறது. போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் கோவில்களுக்கு வெளியே நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.