போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீலை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம் - பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நடந்தது

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தவர்களை கைது செய்தது தொடர்பாக போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீலை கண்டித்து பா.ஜனதா சார்பில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீலை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம் - பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நடந்தது
Published on

பெங்களூரு,

கர்நாடக போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறு செய்திகள் பரப்பியதாக சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பா.ஜனதா ஆதரவாளர்கள் ஆவர். இந்த நிலையில் மந்திரி எம்.பி.பட்டீலை கண்டித்து கர்நாடக பா.ஜனதா சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதுபோல் போலீஸ் மந்திரியை கண்டித்து பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பா.ஜனதாவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். கர்நாடக அரசையும், மந்திரி எம்.பி.பட்டீலையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் பா.ஜனதா மூத்த தலைவரான முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. இதில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும். கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், இந்த தேர்தலில் 4 இடங்களில் தான் வெற்றி பெறும்.

நாட்டை ஆட்சி செய்யும் தகுதியை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது. நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால், கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை.

இத்தகைய கட்சி மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்று கூறுவது நகைச்சுவையாக உள்ளது. நாட்டை ஆளும் தகுதி காங்கிரசுக்கு இல்லை. வருகிற 23-ந் தேதிக்கு பிறகு கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்கிறதோ? அல்லது இல்லையோ என்பது தெரியவில்லை.

ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்களிடம் ஒருவிதமான அவநம்பிக்கை இருப்பது தெரிகிறது. அவர்கள் ஒருவரையொருவர் தோற்கடிப்பர். கூட்டணி ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும். அதனால் நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம்.

ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள கூட்டணி கட்சியினர் இப்போது முயற்சியில் இறங்கிவிட்டனர். சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தவர்களை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது கண்டிக்கத்தக்கது. எம்.பி.பட்டீல் தான் ஒரு சர்வாதிகாரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இது நீண்ட நாட்கள் நீடிக்காது. எம்.பி.பட்டீல் தனது செயல்பாட்டை சரிசெய்துகொள்ள வேண்டும். இவ்வாறு ஆர்.அசோக் பேசினார்.

இதையடுத்து பா.ஜனதா மாநில துணைத்தலைவர் தேஜஸ்வினி அனந்தகுமார் பேசுகையில், கர்நாடகத்தில் தனிநபர் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநில அரசுக்கு எதிராக பேசுபவர்களை கைது செய்ய போலீஸ் மந்திரி உத்தரவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பது தவறா?. போலீஸ் மந்திரி தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் மைசூரு, சிவமொக்கா, உடுப்பி, சிக்கமகளூரு, தட்சிணகன்னடா மாவட்டம் உள்பட மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் பா.ஜனதா சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com