பா.ஜ.க.வின் பினாமி ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது - காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேச்சு

பா.ஜ.க.வின் பினாமி ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
பா.ஜ.க.வின் பினாமி ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது - காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேச்சு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் வெங்கடேசபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஆசைத்தம்பி வரவேற்றார். வாரியத்தலைவர் சுப.சோமு, ரோவர் குழுமத்தின் துணைத்தலைவர் ஜான் அசோக் வரதராஜன், முன்னாள் எம்.பி. விஸ்வ நாதன், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன், ஊடக பிரிவை சேர்ந்த பென்னட் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மற்றும் இதர பொருட்களின் விலைவாசி ஏறிவருகிறது. மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி ஏறிவருகிறது. மக்களின் வாழ்க்கை தரம் குறைந்து வருகிறது. பா.ஜ.க.வின் பினாமி ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது. மோடி அலை ஓய்ந்து விட்டது. ராகுல் காந்தி அலைவீச தொடங்கி விட்டது. வரும் சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெறும்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை அதிகப் படுத்தும் வகையில் 35 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை 50 லட்சம் உறுப்பினர்களாக உயர்த்த நாம் பாடுபடவேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர். தற்போது 3-வதாக ஒரு நீதிபதி விசாரணை செய்ய உள்ளார். அவர் விரைவில் தீர்ப்பு வழங்கவேண்டும். தமிழகத்தில் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சேர்ந்து வரலாம். இதனால் அமைப்பு ரீதியாக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com