மண்டியா நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு

மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும் என்றும், கோலார் (தனி) தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக முனிசாமி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டியா நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பா.ஜனதா சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உமேஷ் ஜாதவ் கலபுரகியிலும், ஏ.மஞ்சு ஹாசன் தொகுதியிலும் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பளித்துள்ளது.

மீதமுள்ள மண்டியா, பெங்களூரு தெற்கு, கோலார் உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதே நேரத்தில் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி பா.ஜனதா தலைவர்களிடம் நடிகர் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதா கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை டெல்லியில் நேற்று பா.ஜனதா மேலிடம் வெளியிட்டுள்ளது. அதில், கோலார் (தனி) தொகுதியில் பா.ஜனதா சார்பில் முனிசாமி வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் மண்டியா தொகுதியில் பா.ஜனதா போட்டியிடவில்லை. அந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கர்நாடகத்தில் 27 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா போட்டியிடுகிறது. பெங்களூரு தெற்கு, பெங்களூரு புறநகர், சிக்கோடி, ராய்ச்சூர், கொப்பல் ஆகிய 5 தொகுதிகளுக்கு பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாகவும், இன்று(ஞாயிற்றுக்கிழமை) வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com