கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா 3 தொகுதியில் வெற்றி

கர்நாடக மேல்-சபையில் 6 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 3 தொகுதியில் வெற்றி பெற்றது. ஜனதா தளம்(எஸ்) கட்சி 2 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் பிடித்தன.
கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா 3 தொகுதியில் வெற்றி
Published on

பெங்களூரு,

கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் சங்கரமூர்த்தி, ராமச்சந்திர கவுடா, அமர்நாத்பட்டீல், கணேஷ் கார்னிக், ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் மரிதிப்பேகவுடா, ரமேஷ்பாபு ஆகியோரின் பதவி காலம் நிறைவடைகிறது. இதையடுத்து கர்நாடக தென்கிழக்கு, கர்நாடக தென்மேற்கு, கர்நாடக தெற்கு ஆகிய 3 ஆசிரியர் தொகுதிகளிலும், கர்நாடக தென்மேற்கு, கர்நாடக வடகிழக்கு, பெங்களூரு ஆகிய 3 பட்டதாரி தொகுதிகளிலும் என மொத்தம் 6 தொகுதிகளில் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டி பெங்களூரு உள்பட வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இருந்தன. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இந்த தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. வாக்குச்சீட்டு என்பதால் எண்ணும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் பகலில் முன்னிலை நிலவரங்கள் மட்டுமே வெளிவந்தன.

இந்த நிலையில் ஓட்டு எண்ணும் பணி நேற்று முழுமையாக முடிவடைந்தது. கர்நாடக தென்மேற்கு பட்டதாரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆயனூர் மஞ்சுநாத், பெங்களூரு பட்டதாரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அ.தேவேகவுடா, தென்கிழக்கு ஆசிரியர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நாராயணசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதன்படி, கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் மரிதிப்பேகவுடா, தென்மேற்கு ஆசிரியர் தொகுதியில் அதே கட்சியை சேர்ந்த வேட்பாளர் போஜேகவுடா ஆகியோர் வெற்றி பெற்றனர். வடகிழக்கு பட்டதாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்திரசேகர் பட்டீல் வெற்றி பெற்றார்.

கர்நாடக மேல்-சபையில் 6 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 3 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. முன்பு இந்த 6 தொகுதிகளில், பா.ஜனதா வசம் 4 தொகுதியும், ஜனதா தளம்(எஸ்) வசம் 2 தொகுதியும் இருந்தன. இதன்படி பா.ஜனதாவிடம் இருந்து ஒரு தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com