

கொடைக்கானல்,
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 5 தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. விடிய, விடிய நீடித்ததோடு நேற்று மாலை வரை ஓயாமல் மழை வெளுத்து வாங்கியது. 24 மணி நேரமும் இடைவிடாது பெய்த மழையினால் நகரின் பல்வேறு இடங்களிலும், மலைக்கிராமங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கொடைக்கானல் பகுதியில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோலா அருவி, பாம்பார் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதுமட்டுமின்றி கொடைக் கானல் பகுதியில்உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேறியது. தொடர் மழை காரணமாக, பகல் நேரத்திலேயே கொடைக் கானலில் கடும் குளிர் வாட்டியது. குளிரில் இருந்து தப்பிக் கும் வகையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான உடைகளை அணிந்தே நடமாடினர். சுற்றுலா பயணிகளின் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. அவர்கள் விடுதிகளுக்குள்ளேயே முடங்கினர்.
முறிந்து விழுந்த மரங்கள்
தொடர் மழை காரணமாக, கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் அடுக்கம் பிரிவு அருகே மரம் முறிந்து விழுந்தது. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று மரத்தினை அகற்றினர்.
இதேபோல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அந்த மரங்களை உடனடியாக அகற்றி நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர். பலத்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கொடைக்கானலில் உள்ள 50 சதவீதத்துக்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
போக்குவரத்து நிறுத்தம்
இதற்கிடையே தொடர் மழை காரணமாக பழனி- கொடைக்கானல் மலைப்பாதையில் நேற்று இரவு 7.30 மணி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் வத்தலக்குண்டு, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் வழியாக திருப்பி விடப்பட்டன.