

கோவை,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடை பெற்றது. மேலும் மதுராந்தகத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்தும் கோவையில் தி.மு.க.வினர் நேற்று சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
கோவை காந்திபுரம் டவுன்பஸ் நிலையம் முன் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் சாலை மறியல் நடந்தது. அப்போது தி.மு.க.வினர் சாலையில் உட்கார்ந்து பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ்சை மறித்தனர். இதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி, மாவட்ட பொருளாளர் நாச்சி முத்து, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கார்த்திக் செல்வராஜ், இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் முருகவேல், வக்கீல்கள் மகுடபதி, மயில்வாகனம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜேந்திரபிரபு, கார்த்திகேயன், வடகோவை ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கிராஸ்கட் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட வீரகோபால், பகுதி செயலாளர்கள் வெ.ந.உதயகுமார், மு.ரா.செல்வராஜ், கோவை லோகு, புதூர்மணி, முன்னாள் கவுன்சிலர்கள் டி.பி.சுப்பிரமணியம், நந்தகுமார், குனியமுத்தூர் லோகு, கோட்டை அப்பாஸ், மீனாலோகு, சண்முகசுந்தரம் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் முன் முன்னாள் கவுன்சிலர் எஸ்.எம்.சாமி தலைமையிலும், ஆவாரம்பாளையத்தில் மகேஷ்குமார் தலைமையிலும், பீளமேட்டில் முருகேசன் தலைமையிலும் சாலை மறியல் நடந்தது. இதில் கலந்துகொண்ட தி.மு.க.வினர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், இதற்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
கோவை மாநகரில் 5 இடங்களில் நடந்த சாலை மறியலில் தி.மு.க.வினர் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.