மணல் கடத்தலை தடுத்த போலீஸ் ஏட்டு அடித்துக்கொலை மாணவர் உள்பட 2 பேர் கைது

நாங்குநேரி அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் ஏட்டு அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மணல் கடத்தலை தடுத்த போலீஸ் ஏட்டு அடித்துக்கொலை மாணவர் உள்பட 2 பேர் கைது
Published on

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்டது வடக்கு விஜயநாராயணம். இங்குள்ள போலீஸ் நிலையத்தில், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் ஜெகதீஷ்துரை (வயது 33). இவர், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியை முடித்து விட்டு போலீஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

கக்கன்நகர் விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே ஒரு டிராக்டர் வேகமாக அவரை கடந்து சென்றது. அந்த டிராக்டரில் மணல் இருந்தது. ஜெகதீஷ் துரையை கண்டதும், டிரைவர் டிராக்டரை வேகமாக ஓட்டினார்.

உடனே ஜெகதீஷ்துரை, அந்த டிராக்டரை விரட்டிச்சென்று நிறுத்துமாறு கையால் சைகை செய்தார். ஆனால் டிரைவர், ஜெகதீஷ் துரையை பொருட்படுத்தாமல் சித்தூர் செல்லும் சாலையில் வேகமாக டிராக்டரை ஓட்டினார்.

அந்த டிராக்டரை விரட்டிச் சென்றபடியே இதுபற்றி வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெர்ஜின் சேவியோவை, ஜெகதீஷ் துரை செல்போனில் தொடர்பு கொண்டு பாண்டிச்சேரி கிராமப்பகுதிக்கு வரும்படி கூறினார். தகவல் அறிந்தவுடன் இன்ஸ்பெக்டர், போலீஸ் படையுடன் மணல் கடத்தல் கும்பலை தேடி புறப்பட்டார்.

இதற்கிடையே, டிரைவர் பாண்டிச்சேரி கிராமத்துக்கு அருகில் காட்டுப்பகுதியில் டிராக்டரை ஓட்டினார். தாறுமாறாக ஓடிய டிராக்டரின் பின்சக்கர ஆக்சல் கட்ஆனது. அதில் இருந்தவர்கள் கீழே குதித்து தப்பி ஓட முயன்றனர். ஏட்டு ஜெகதீஷ்துரை அவர்களை பிடிக்க முயன்றார்.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கட்டி புரண்டு சண்டை போட்டனர். ஏட்டுவிடம் இருந்து தப்பிக்க முயன்ற மணல் கொள்ளையர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. மாறாக, ஏட்டுவை தீர்த்துக்கட்டினால்தான் நம்மால் தப்ப முடியும் என்ற முடிவுக்கு வந்தனர். உடனே டிராக்டரில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ஏட்டு ஜெகதீஷ் துரை தலையில் ஓங்கி 2, 3 முறை அடித்தனர். இதில் ஏட்டு ஜெகதீஷ் துரை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார். உடனே கொள்ளையர்கள், ஏட்டுவின் செல்போனை உடைத்தனர். பின்னர் பேட்டரியை எடுத்துவிட்டு செல்போனை அந்த பகுதியில் வீசினர். மோட்டார் சைக்கிளையும் கீழே தள்ளி விட்டனர்.

அதன்பிறகு ஆத்திரம் அடங்கிய மணல் கொள்ளை கும்பல் அங்கிருந்து செல்ல முயன்றனர். டிராக்டரை விட்டுவிட்டு சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று நினைத்தனர். இதனால் டிராக்டரில் இருந்த மணலை கீழே கொட்டினர். பின்னர் டிராக்டரை ஓட்டிச் செல்ல முயன்றனர். ஏற்கனவே பின்சக்கர பகுதி பழுதாகி இருந்ததால் டிராக்டரை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் ஒருசில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்து முடிந்தது.

ஜெகதீஷ்துரை கொடுத்த தகவலின்பேரில் அவரை தேடி வந்த போலீசார், ஜெகதீஷ்துரை செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், செல்போன் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தொடர்பு கொண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை தேடி அலைந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதிகாலை 5 மணி அளவில்தான் பாண்டிச்சேரி கிராமத்துக்கு அருகில் காட்டுப்பகுதியில் ஏட்டு ஜெகதீஷ் துரையின் செருப்புகள் கிடந்தது தெரிய வந்தது. உடனே போலீசார், அங்கு சென்றனர். அங்கு ஏட்டு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு அருகில் ஏட்டு பயன்படுத்தி வந்த டார்ச்லைட் கிடந்தது.

ஏட்டு கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்தவுடன் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் டைகர் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த கொலை தொடர்பாக வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஏட்டுவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் ஏட்டுவை மணல் கொள்ளையர்கள் கொலை செய்த தகவல் காட்டுத்தீ போல் அந்த பகுதியில் பரவியது. இதனால் வடக்கு விஜயநாராயணம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதாவது, மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர், பரப்பாடி அருகே தாமரைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த டிராக்டரில் மணல் அள்ளச்சென்ற கிருஷ்ணன் (50), முருகபெருமாள் (21) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகபெருமாள், நாகர்கோவிலில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஆவார்.

இந்த கொலை தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ஏட்டு ஜெகதீஷ் துரை கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளியான முருகன் (30) மற்றும் கல்மாணிக்கபுரத்தைச் சேர்ந்த மணி உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றோம். இதில் முருகன், டிராக்டர் உரிமையாளரான மாடசாமியின் கடைசி மகன் ஆவார். முருகன் பந்தல் தொழிலும் செய்து வருகிறார். அவர்தான் டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். விரைவில் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வோம் என்றார்.

ஏட்டு ஜெகதீஷ்துரையின் சொந்த ஊர் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சிந்தாமணி ஆகும். இங்குள்ள புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் அருகில் வீடு உள்ளது. தந்தை செபஸ்தியான் இறந்து விட்டார். தாயார் அன்னசெல்வம் சிந்தாமணியில் வசித்து வருகிறார். ஏட்டு ஜெகதீஷ் துரை, அதே ஊரைச் சேர்ந்த மரியரோஸ் மார்க்ரெட் (30) என்ற பெண்ணை காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜோயல் என்ற 3 வயது மகன் உள்ளான். மரியரோஸ் மார்க்ரெட் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். எம்.காம்., பி.எட். பட்டதாரியான அவர், தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகே ஆசீர்வாதபுரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக உள்ளார். ஜெகதீஷ்துரையின் அண்ணன்கள் ராஜன் வின்சென்ட், விக்டர் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ளனர். அக்கா மல்லிகா திருமணம் ஆகி கோவையில் வசித்து வருகிறார்.

ஏட்டுவின் கொலை பற்றி அறிந்ததும் மனைவி மரியரோஸ் மார்க்ரெட் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மணல் கடத்தலை தடுத்த போலீஸ் ஏட்டு அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை குறித்து உறவினர்கள் கூறுகையில், மணல் கடத்தல் கும்பலுக்கும், அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு உள்ளது. மணல் கடத்தல் பற்றி உயர் அதிகாரிகளுக்கு ஜெகதீஷ்துரைதான் அடிக்கடி தகவல் கொடுத்து வந்ததாக மணல் கொள்ளையர்களிடம் அந்த சப்-இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். அதன்பேரிலேயே ஜெகதீஷ்துரையை அந்த கும்பல் கொலை செய்துள்ளனர். எனவே, இந்த கொலைக்கும், அந்த சப்-இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றனர். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் ஏட்டு கொலை செய்யப்பட்டது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு கூறுகையில், கடந்த 2000-ம் ஆண்டு வள்ளியூர் கண்ணநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாஸ் என்ற வாலிபர் மணல் கடத்தல் கும்பலால் கொலை செய்யப்பட்டார். 2012-ம் ஆண்டு மிட்டாதார்குளத்தில் குமார் என்பவரும் மணல் கடத்தல் கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். திசையன்விளை பெருங்குளத்தைச் சேர்ந்த செல்லப்பா என்பவர், மணல் கடத்தல் கும்பலால் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பின்னர் லாரி மோதிய விபத்தில் அவர் இறந்து விட்டதாக கூறி வழக்கு மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது 4-வதாக போலீஸ் ஏட்டு ஒருவரையே மணல் கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மணல் கடத்தல் கும்பலால் இன்னும் பல்வேறு இன்னல்களை அந்த பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். மணல் கடத்தல் கும்பலுக்கும், போலீசாருக்கும் தொடர்பு இருப்பதனால்தான் இதுபோன்ற கொலைகளை மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அரங்கேற்றி வருகின்றனர். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com