கொரோனா பரிசோதனைக்கு டாக்டரின் பரிந்துரை தேவையில்லை: மும்பை மாநகராட்சி உத்தரவு

பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக, மும்பையில் டாக்டர்கள் பரிந்துரை இன்றி பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனைக்கு டாக்டரின் பரிந்துரை தேவையில்லை: மும்பை மாநகராட்சி உத்தரவு
Published on

மும்பை,

மும்பையை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 86 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 5 ஆயிரத்து 2 பேர் பலியாகி உள்ளனர். எனினும் இங்கு கொரோனா பரிசோதனை குறைந்த அளவில் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

மேலும் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ கவுன்சில் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. அந்த வழிகாட்டுதல்களின்படியும், டாக்டர் பரிந்துரை சீட்டு உள்ளவர்களுக்கு மட்டும் நோய் தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மும்பையில் விருப்பம் உள்ளவர்கள் டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இன்றி கொரோனா பரிசோதனை செய்துகொள்ள மும்பை மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.

இதன்மூலம் தொற்று உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். மேலும் இந்த முடிவின் மூலம் மும்பையில் சோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் கமிஷனர் இக்பால் சகால் இந்த முடிவை எடுத்ததாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல இனிமேல் தனிமை மையத்தில் வைக்கப்பட்டவர்கள் கொரோனா சோதனை செய்து, தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு தான் அங்கு இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா சோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் அரசு நிர்ணயம் செய்த ரூ.2 ஆயிரத்து 500 கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும். வீடுகளுக்கு நேரடியாக சென்று மாதிரி சேகரித்து மேற்கொள்ளப்படும் சோதனைக்கு ரூ.2 ஆயிரத்து 800 கட்டணமாகும்.

இதேபோல தனியார் ஆய்வகங்கள் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அதுகுறித்த தகவலை மும்பை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com