

தேவாரம்,
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாய் பிரிந்து செல்கிறது. இதில் 18-ம் கால்வாயின் நீட்டிப்பு பகுதிகளாக தேவாரம், பொட்டிபுரம், சிலமலை, போடி, ராசிங்காபுரம், மேலசொக்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. 18-ம் கால்வாய் மூலம் இந்த பகுதிகளில் 4,500 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர 7 குளங்கள் மூலம் 946.16 ஏக்கர் நிலங்களும், 585 கிணறுகளில் நிலத்தடிநீர் உயர்வதன் மூலம் 3,800 ஏக்கர் நிலங்களும் மறைமுகமாக பாசன வசதி பெறுகின்றன.
இதற்கிடையே 18-ம் கால்வாயின் நீட்டிப்பு பகுதிகளுக்கு முல்லைப்பெரியாறு கால்வாயில் இருந்து வினாடிக்கு 95 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று தேவாரம் மூணான்டிபட்டியில் உள்ள மதகில் இருந்து 18-ம் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, 18-ம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கு மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது கால்வாயில் இருந்து சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர்தூவினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பல்லவி பல்தேவ், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், ஜக்கையன் எம்.எல்.ஏ., உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர்கள் அழகுராஜா, கதிரேசன், உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன், துணைத்தலைவர் மூக்கம்மாள் கெப்புராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 18-ம் கால்வாயில் திறக்கும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.